சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன் போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு மேற்கொண்டதாகப் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கல்வி வழங்குவதற்காக துணை வேந்தரே தனி நிறுவனம் தொடங்கியிருப்பது விதிமீறல் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விதிகளை மீறி கல்வி நிறுவனம் நடத்திய புகாரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கருப்பூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து பூட்டர் என்ற தனி நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அரசு செலவில் அலுவலர்களைப் பயன்படுத்தியது, தனி நிறுவனங்களைத் தொடங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் இது குறித்து தெரிவிக்கையில், “பெரியார் பல்கலைக்கழகத்தை அதன் துணைவேந்தரும், கூட்டாளிகளும் கூறுபோட்டு விற்றுக் கொண்டிருக்கின்றனர். பெரியார் பல்கலைக்கழகத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றனர். பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டே அதில் புதிய நிறுவனத்தை தொடங்குவது சட்டவிரோதம். இதற்காகவே துணைவேந்தர் உள்ளிட்டோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முடியும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.