சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைப் பதிவாளராகப் பணியாற்றி வந்த ராமன், அங்குள்ள தொலை நிலைய கல்வி நிலையத்தில் கண் மருத்துவ பாடம் தொடங்க விதிகளை மீறி அனுமதி வழங்கியதாக புகார் எழுந்தது. மேலும், தொலை நிலைய கல்வி நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.
அதுப்பற்றி ராமன் மற்றும் தொகுப்பூதிய ஊழியர் அன்பரசி ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல், பல்கலைக்கழகம் நடத்திய விசாரணையில் பல்வேறு தவறுகள் நிகழ்ந்திருப்பது உறுதிச் செய்யப்பட்டது. இதனையடுத்து, ராமன், அன்பரசி ஆகியோரை பணி நீக்கம் செய்ய, பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு துணைவேந்தருக்கு பரிந்துரை செய்தது.
அதனை தொடர்ந்து, ராமன் மற்றும் அன்பரசி ஆகியோரை பணி நீக்கம் செய்து பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜகந்நாதன் உத்தரவிட்டுள்ளார். துணைப் பதிவாளராக இருந்த ராமன், இந்த மாதம் 30- ஆம் தேதி பணி ஓய்வு பெறவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.