சேலம் பெரியார் பல்கலையில் எம்.எஸ்ஸி., தாவரவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி, பல்கலை விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ஜம்மனஹள்ளியைச் சேர்ந்தவர் திருமலை என்கிற ராஜா. தர்மபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கிரேன் ஆப்பரேட்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செந்தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். இவர்களுடைய மூத்த மகள் நிவேதா (22), சேலத்தை அடுத்த ஓமலூரில் உள்ள பெரியார் பல்கலையில் எம்.எஸ்ஸி., தாவரவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
பல்கலை வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஜன. 10) மாலையில் சக மாணவிகளிடம், தான் ஓய்வெடுப்பதாகக் கூறிவிட்டு சென்ற நிவேதா, அறையை உள்புறமாக தாழிட்டுக் கொண்டார். சனிக்கிழமை (ஜன. 11) மாலை வரை ஆகியும் அவர், தனது அறையைவிட்டு வெளியே வரவில்லை. இதையடுத்து, சக மாணவிகள் நிவேதாவின் அறைக் கதவைத் தட்டிப்பார்த்தபோதும் அவர் கதவைத் திறக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த விடுதி மாணவிகள், இதுகுறித்து விடுதி காப்பாளர் மற்றும் பல்கலை நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். சேலம் மாநகர காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கதுரை மற்றும் கருப்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்தனர். விடுதியின் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அங்கே, மின் விசிறியில் சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்ட நிலையில் மாணவி நிவேதா, சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த விடுதி மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். துணைவேந்தர் குழந்தைவேல் மற்றும் பல்கலை பேராசிரியர்களும் அங்கு விரைந்தனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் இரவு 9 மணியளவில் பல்கலைக்கு வந்து சேர்ந்தனர். சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, ''மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரங்கள் தெரியவில்லை. பெற்றோருடன் பிரச்னையா? அல்லது காதல் தோல்வியா, பல்கலையில் வேறு ஏதேனும் பிரச்னையா என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம். தற்கொலைக்கு முன் அவர் ஏதேனும் கடிதம் எழுதி வைத்திருக்கிறாரா என்றும் அறையில் சோதனை நடந்து வருகிறது,'' என்றனர்.
இது ஒருபுறம் இருக்க, தாவரவியல் துறைத்தலைவர் செல்வம் பல்கலை லிப்டில் சென்றபோது, அதே லிப்டுக்குள் ஏறிச்சென்ற விலங்கியல் துறை மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இரு நாள்களுக்கு முன்பு ஒரு புகார் எழுந்தது. அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியிடம் பல்கலை நிர்வாகம் சரியாக விசாரணை நடத்தவில்லை எனவும், மாணவிகளிடம் குறைகேட்பு கூட்டம் முறையாக நடத்தப்படுவதில்லை என்றும் மாணவர்கள் சிலர் குற்றஞ்சாட்டியதோடு, பல்கலைக்கு எதிராக முழக்கங்களும் எழுப்பினர்.
மாணவி தற்கொலை, மாணவர்கள் முழக்கம் என அடுத்தடுத்த சம்பவங்களால் சனிக்கிழமை மாலையில் பெரியார் பல்கலை வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.