பெரியார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை எனக்கூறி, விழா அரங்கில் இருந்து பாமக எம்எல்ஏக்கள் இருவர் பாதியிலேயே வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் பெரியார் பல்கலையில் 21வது பட்டமளிப்பு விழா, பல்கலை கலையரங்கத்தில் புதன்கிழமை (ஜூன் 28) நடந்தது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை வகித்து, பட்டங்களை வழங்கினார். சென்னை ஐஐடி முன்னாள் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி விழா உரையாற்றினார். இந்த விழாவில், பல்கலையின் இணைவேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் பட்டமளிப்பு விழாவில் அவர் திடீரென்று பங்கேற்கவில்லை. அன்றைய நாளில் சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
ஏற்கனவே தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், தமிழக அரசுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கும் நிலையில், அவரை புறக்கணிக்கும் விதமாகவே உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்த விழாவில் பங்கேற்கவில்லை என்ற பேச்சும் கிளம்பியது. இது ஒருபுறம் இருக்க, பட்டமளிப்பு விழா தொடங்கிய சிறிது நேரத்தில் அரங்கத்திற்குள் பாமக எம்எல்ஏக்கள் அருள், சதாசிவம் ஆகிய இருவரும் வந்தனர். அவர்களுக்கு பார்வையாளர் பகுதியில் முன்வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு, அமர வைக்கப்பட்டனர். விழா அரங்கத்திற்குள் ஆளுநர் வந்த சிறிது நேரத்தில் பாமக எம்எல்ஏ சதாசிவம், அங்கிருந்த ஊழியர் ஒருவரை அழைத்து காதோடு காதாக ஏதோ சொன்னார். அவரும் மேடைக்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் சதாசிவம் கூறிய தகவலை 'பாஸ்' செய்தார்
பின்னர் மீண்டும் அதே ஊழியரை அழைத்த சதாசிவம் எம்எல்ஏ, அவரிடம் ஏதோ காதோடு காதாக கடிக்க, அதற்கும் உரிய ரெஸ்பான்ஸ் இல்லை. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த சதாசிவம், நாங்க இருப்பதா? அல்லது இப்போதே எழுந்தே போவதா? என்று அந்த ஊழியரிடம் சற்றே குரலை உயர்த்திச் சொன்னார். அதனால் அங்கு சில நொடிகள் சலசலப்பு எழுந்து அடங்கியது. அதன் பிறகு சிறிது நேரத்தில் பாமக எம்எல்ஏக்கள் இருவரும் விழா அரங்கத்தை விட்டு பாதியிலேயே வெளியேறினர். அருள் எம்எல்ஏ பத்திரிகையாளர்களை சந்திக்காமல் காரில் ஏறி விருட்டென்று அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்.
பல்கலை வளாகத்தில் சதாசிவம் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் சிறிது நேரம் பேசினார். அப்போது அவர், “விழாவில் கலந்து கொள்ள எங்களுக்கு முறையான அழைப்பு அனுப்பப்படவில்லை. அருள் எம்எல்ஏயின் தொகுதிக்குள்தான் பெரியார் பல்கலைக்கழகம் இருக்கிறது. அதுமட்டுமின்றி, அவர் இந்தப் பல்கலையின் செனட் உறுப்பினராகவும் இருக்கிறார். அவருக்குக்கூட மேடையில் இருக்கை வழங்கப்படவில்லை. இந்த நிலையில், ஆளுநர் வந்திருக்கிறாரே என்று அவரை சந்தித்து சால்வை போர்த்தவும், நன்றி சொல்வதற்கும் அவரை சந்திக்க ஊழியர் ஒருவர் மூலம் அனுமதி கேட்டோம். அதற்கு அவர்கள் தரப்பில், ஆளுநரை கெஸ்ட்ஹவுசில் வந்து சந்திக்கும்படி சொன்னார்கள். அதற்காக விழா முடியும் வரை காத்திருக்க வேண்டுமா? அங்கெல்லாம் சென்று அவரை சந்திக்க முடியாது என்று சொல்லிவிட்டோம். ஆளுநர் வருகையையொட்டி கருப்பு நிறத்தில் உடை அணிந்து வரக்கூடாது என்றெல்லாம் பெரியார் பல்கலைக்கழகம் உத்தரவு போடுகிறது. யார் வேண்டுமானாலும் என்ன நிறத்திலும் உடை அணிந்து வரலாம். பெரியார் பல்கலைக்கழகம் ஏதோ ஒரு தனி நாடு போல நடந்து கொள்கிறது. நாங்கள் வந்த பிறகாவது உரிய மரியாதை அளித்திருக்கலாம். அதையும் செய்யத் தவறியதால் விழாவில் இருந்து பாதியிலேயே வெளியேறுகிறோம்” என்றார் எம்எல்ஏ சதாசிவம்.
இது தொடர்பாக அருள் எம்எல்ஏவிடம் கேட்டபோது, “பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை. இருந்தாலும் என் தொகுதிக்கு உட்பட்ட பல்கலையில் பட்டமளிப்பு விழா நடப்பதால் விழாவிற்குச் சென்றிருந்தேன். என்னுடன் மேட்டூர் எம்எல்ஏ சதாசிவமும் வந்திருந்தார். விழா அரங்கத்தில் எங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை” என்றார் விரக்தியாக.
இந்த சம்பவம், பெரியார் பல்கலை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாமக எம்எல்ஏக்களுக்கான அழைப்பு விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதனிடம் கேட்டோம். “பட்டமளிப்பு விழாவிற்கு நான்கு நாள்கள் முன்னதாக சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருளின் வீட்டிற்கு எங்கள் தரப்பில் இருந்து பேராசிரியரும், செனட் உறுப்பினருமான கண்ணன் என்பவர் மூலம் அழைப்பிதழ் கொடுக்கச் சென்றோம். அருள் எம்எல்ஏயின் வீடு பூட்டப்பட்டு இருந்ததால் அவருடைய அலுவலகத்திற்குச் சென்றோம்.
அங்கும் அவர் இல்லாததால், அலுவலகத்தில் இருந்த அவருடைய உதவியாளர் மூலமாக விவரத்தைச் சொல்லி, அருள் எம்எல்ஏயிடம் பேசினோம். அப்போது அவர், தனது உதவியாளரிடம் அழைப்பிதழை கொடுத்துவிட்டுச் செல்லும்படி கூறினார். அதன்படி நாங்களும் அந்த உதவியாளரிடம் அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு வந்தோம். இது மட்டுமின்றி, விழா நடந்த நாளன்று காலை பதிவாளர் தங்கவேல், அருள் எம்எல்ஏவை செல்போனில் தொடர்பு கொண்டு விழாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். பட்டமளிப்பு விழா மேடையில் செனட் உறுப்பினர்களுக்கு, எம்எல்ஏக்களுக்கு ஒருபோதும் இருக்கைகள் ஒதுக்கப்படுவதில்லை. அதேநேரம் விஐபிக்களுக்கு பார்வையாளர் பகுதியில் முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்படும். அத்தகைய மரியாதை பாமக எம்எல்ஏக்கள் இருவருக்கும் செய்யப்பட்டு இருந்தது. அப்படி இருந்தும், அவர்கள் ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று தெரியவில்லை” என்றார் துணைவேந்தர் ஜெகநாதன்.
உரிய அழைப்பு இல்லை என பாமக எம்எல்ஏக்களும், மரியாதையுடன் அழைக்கப்பட்டனர் என்று பல்கலை தரப்பும் மாறி மாறி சொல்லி வரும் நிலையில், எது நிஜம் என்பதை அவரவர்களின் மனசாட்சிக்கே விட்டுவிட வேண்டியதுதான்.