சேலம் பெரியார் பல்கலையில், ஜூன் 28 ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடக்கிறது. இதில் 61 ஆயிரம் மாணவ, மாணவிகள் பட்டம் பெறுகின்றனர்.
சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெரியார் பல்கலையின் 21வது பட்டமளிப்பு விழா, பெரியார் கலையரங்கத்தில் வரும் 28 ஆம் தேதி, பகல் 12.30 மணிக்கு நடக்கிறது. இந்நிகழ்ச்சியில், பல்கலை வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என். ரவி கலந்து கொண்டு முதுமுனைவர் பட்டம் பெறும் 4 பேருக்கும், முனைவர் பட்டம் நிறைவு செய்துள்ள 505 மாணவர்களுக்கும் தங்கப்பதக்கம், பட்ட சான்றிதழ்களை வழங்குகிறார். மேலும், பெரியார் பல்கலையுடன் இணைவு பெற்றுள்ள கல்லூரிகளில் ஆய்வியல் நிறைஞர், முதுகலை, இளங்கலை பாடங்களில் முதலிடம் பெற்ற 99 மாணவர்களுக்கும் தங்கப்பதக்கம், பட்ட சான்றிதழ் வழங்குகிறார்.
கடந்த 2021 - 2022 ஆம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் பட்டங்களைப் பெறுகின்றனர். பெரியார் பல்கலை துறைகளில் முதுகலை பாடப் பிரிவில் முதலிடம் பிடித்த 28 மாணவர்களுக்கும், இளங்கலை பிரிவில் 3 மாணவர்களுக்கும், இணைவு பெற்ற கல்லூரிகளில் முதுகலை பாடப்பிரிவில் 28 பேருக்கும், இளங்கலை பாடப்பிரிவில் 40 பேருக்கும் தங்கப் பதக்கத்துடன், பட்ட சான்றிதழ் வழங்கி ஆளுநர் தலைமை உரை ஆற்றுகிறார்.
இந்நிகழ்ச்சியில் பல்கலை இணை வேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார். எம்.ஐ.டி. முன்னாள் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார்.
இந்த விழாவில் ஆளுநரிடம் பட்டங்களைப் பெறவுள்ள 608 மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த 53,625 மாணவர்களும், பெரியார் பல்கலையில் பயின்ற 1,076 மாணவர்களும், தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பயின்ற 6,415 மாணவர்களும் என மொத்தம் 61,724 பேர் பட்டங்களைப் பெற உள்ளனர்.
இவ்வாறு பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.