பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்தின் மாற்று கருத்தினால் கிடப்பில் போடப்பட்டுள்ள ஜவுளி பூங்காவினை செயல்படுத்த கோரி, இன்று ஜவுளி பூங்கா இடத்திற்கு செல்லும் அனுகு சாலையில் வைத்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டில் சென்னை தலைமை செயலகத்தில் நடந்த மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் வைத்து, பெரம்பலூர் மாவட்டத்தில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக ஜவுளி பூங்கா செயல்படுத்தபடும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், பாடாலூர் & இரூர் ஊராட்சியில் உள்ள 40.7 ஹெக்டேர்(100 ஏக்கர்) நிலம் தேர்வு செய்யபட்டு கிராம சபை தீர்மானம் செய்து தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் வசம் நிலம் ஒப்படைக்கபட்டது.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில், சார் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், ஊராட்சி உதவி இயக்குநர், செயற்பொறியாளர், ஆலத்தூர் வட்டார வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், புது வாழ்வு திட்ட இயக்குநர், பாடாலூர் & இரூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடத்தபட்டது. இதில் ஜவுளி பூங்கா திட்டம் செயல்பட ஆக்கபூர்வமான ஆலோசனைகள் பரிமாறபட்டது. இந்த ஜவுளி பூங்காவில் ஜவுளி தொழில் செய்யதிட 20 நபர்கள் வரை விருப்ப மனு கொடுத்தனர். தொடந்து அந்த தொழில் முனைவோர்கள் ஜவுளி பூங்கா இடத்தை சமன் செய்து, அனுகு சாலையை தார்சாலையாக மேம்பாடு செய்து தருமாறு கேட்டு கொண்டனர்.
தொடர்ந்து இடத்தை சமன் செய்வதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்யபட்டது. ஜவுளி பூங்கா சாலையை தார் சாலையாக மேம்பாடு செய்திட மதிப்பீடு செய்யபட்டு அதற்கான பணியை மேற்கொள்ள நிர்வாக அனுமதி பாடாலூர் ஊராட்சி நிர்வாகம் வசம் கொடுக்கபட்டது. இந்த பணி தொடர்பாக எழுந்த சில சர்ச்சைகள் கலையபட்டு வேலை ஆரம்பிக்கபட்டது. இந்நிலையில் அப்போது இருந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் மறைவுக்கு பின்னர் புதியதாக வந்த பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாலை வேலையை நிறுத்தி வைத்தார்.
மேலும் ஜவுளி பூங்கா அமைக்க இந்த இடம் ஏற்றதக்கது அல்ல, வேறு இடத்தில் அமைக்கலாம் என தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்திற்கு கடிதம் வைத்து உள்ளார். மேலும் தொழிற் முனைவோர்கள் யாரும் முன் வரவில்லை என தகவல் சொல்லி உள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் மாவட்ட செயலாரும், குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் அவர்களும், பெரம்பலூர் எம்.எல்.ஏ இளம்பை தமிழ்செல்வன் அவர்களும் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் அவர்களிடம் ஜவுளி பூங்காவை செயல்படுத்த கோரிக்கை வைத்தனர்.
இதன் பேரில் நடவடிக்கை எடுத்த அமைச்சர் அவர்களும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா அவர்களை அழைபேசியில் தொடர்பு கொண்டு பெரம்பலூர் மாவட்ட ஜவுளிபூங்காவை செயல்படுத்துவதற்கான ஆயத்த வேலைகளை முடுக்கி விடுமாறு அறிவுறுத்தினார்.
இது நடந்து ஒரு வருடமாகியும் மாவட்ட நிர்வாகம் ஜவுளி பூங்காவை செயல்படுத்த எந்தவித ஆயத்த வேலைகளை மேற்கொண்டதாக தெரிய்வில்லை. பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரண்டு எம்.எல்.ஏக்கள் வாயிலாக அமைச்சர் வரை கொண்டு சென்றும் ஜவுளி பூங்கா செயல்பட ஆயத்த பணி மேற்கொள்ளாமல் இருக்கும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்தை கண்டித்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
மத்திய அரசு அல்லாமல் மாநில அரசால் முதன்முதலாக அறிவிக்கபட்ட இந்த ஜவுளி பூங்கா திட்டத்தை விரைந்து செயல்படுத்திட வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.