![Perambalur](http://image.nakkheeran.in/cdn/farfuture/pCJEjERoNPfqR3gSbHB_56ZuzQM3RhqZr86Zo8ePdbU/1593171998/sites/default/files/inline-images/Perambalur_1.jpg)
பெரம்பலூர் நகரத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ளது எளம்பலூர் கிராமம். இந்த ஊரை ஒட்டி புறவழிச் சாலை செல்கிறது. எளம்பலூர் பகுதி சுற்றுச்சாலை பாலத்தின் கீழே நேற்று முன்தினம் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று துணியினால் சுற்றப்பட்டு ஒரு பைக்குள் வைத்து இந்த பாலத்தின் கீழே வீசிவிட்டு சென்றுள்ளனர்.
அன்று அதிகாலை நாய்கள் கும்பலாக அந்த கைப்பையை ஒன்றை ஒன்று போட்டி போட்டு இழுத்துச் சென்றது. அப்போது அந்தப் பைக்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் அந்த வழியே சென்ற ஒரு பெண்ணின் கவனத்தை திருப்பியது. உடனே அந்தப் பெண் நாய்களை துரத்திவிட்டு இந்தப் பையை எடுத்து உள்ளே பார்த்தபோது, துணியால் சுற்றப்பட்ட பெண் குழந்தை இருந்துள்ளது.
இதைப் பார்த்த கிராம மக்கள் கூடிவிட்டனர். உடனடியாக பெரம்பலூர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக காவல்துறை சுகாதாரத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். நாய்களால் இழுத்துச் செல்லப்பட்ட அந்த பெண் குழந்தை உயிருடன் இருந்ததை கண்டறிந்தனர்.
உடனடியாக அந்த குழந்தையை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையை ஆளரவமற்ற புறவழிச்சாலை பாலத்தின் கீழே வீசி விட்டுச் சென்ற அந்த இரக்கமற்ற மனிதர் அல்லது பெண் யாராக இருக்கும் என பெரம்பலூர் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். தமிழகத்தில் குப்பை தொட்டிகளிலும் ஆளரவமற்ற ஆற்றங்கரையிலும், சாலையோரங்களிலும் பிறந்த சிலமணி நேரமே ஆன குழந்தைகளை ஈவிரக்கமின்றி தொடர்ந்து பேசப்படும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதற்குத் தீர்வுதான் என்ன?