பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன், கடந்த சில மாதமாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில், இவர் கடந்த 4-மாதங்களுக்கு முன்பு கேரளா மருத்துவனையில் சிகிச்சைப்பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் மாவட்ட செயலாளரின் உடல்நிலை சரியில்லாததால், அவரால் சரிவர கட்சியின் பணி செய்ய முடியவில்லையெனவும், மாவட்ட செயலாளர் பதவியை வேறு ஒருவருக்கு மாற்றி அறிவிக்க வேண்டுமென, கட்சியினருக்கிடையே சலசலப்பு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமமுக கட்சியிலிருந்து, அதிமுகவில் இணைந்த கவுள்பாளையம் செல்வக்குமாருக்கு பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதால், உட்கட்சி பூசல் கட்சியினர் இடையே பெரிதாக இருந்தது.
இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க அவை தலைவர் நெய்க்குப்பை துரை முயற்சியால் மாவட்ட செயலாளரை மாற்ற, முக்கிய நிர்வாகிகளிடம் கையெழுத்து வாங்கப்பட்டதாக தெரிகிறது.
இதற்கிடையே நேற்று பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க அவை தலைவர் நெய்க்குப்பை துரை(63), மாவிலிங்கை கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி மாவட்ட செயலாளர் முத்துசாமி(60), வெண்பாவூர் கிராமத்தை சேர்ந்த மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் முருகேசன்(50), சாத்தனவாடி ஊராட்சி கழக செயலாளர் தங்கராசு(60) ஆகிய 4 பேரும் நெய்க்குப்பையிலுள்ள துரையின் வயலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு காரில் வந்த, மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரனின் ஆதரவாளர்கள் மற்றும் அதிமுகவினர் சிலர், திடீரென கம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் அங்கு பேசிக்கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் துரை, முத்துசாமி, தங்கராசு ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர். முருகேசன் மட்டும் தப்பி ஓடி விட்டார். அதன் பிறகு தாக்குதல் நடத்திய கும்பல், அங்கிருந்து காரில் தப்பி சென்றனர்.
சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து ரத்த காயங்களுடன் கிடந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக பெரம்பலூர் மாவட்ட செயலாளரை மாற்றம் செய்வது தொடர்பாக, கட்சியினர் ஒரு தரப்பினர் தலைமைக்கு புகார் அளித்துவந்த நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அ.தி.மு.கவினர் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.