வேலூர் சத்துவாச்சாரி காங்கேயநல்லூர் பாலாற்றில் சில மர்ம நபர்கள் வீல் சிப்ஸ்,கான் சிப்ஸ், போட்டி, பாப்கார்ன் போன்ற காலாவதியான தின்பண்டங்களை இரவு நேரத்தில் பாலாற்றில் கொட்டிச் சென்றுள்ளனர். அந்த சிப்ஸ் பாக்கெட்டுகளில் 3 மாதங்களுக்கு முன்பே காலாவதி ஆனதாக தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. சில பாக்கெட்களில் காலாவதி தேதி ஏதும் குறிப்பிடாமல் உள்ளது.
இந்நிலையில், சிப்ஸ் பாக்கெட்டுகளை அவ்வழியாக சென்ற மாடுகள், ஆடுகள், மேய்ந்த நிலையில் சில குழந்தைகள் கையில் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. காலாவதியான தின்பண்டங்களை மாநகராட்சி குப்பைக் கிடங்கில் ஒப்படைக்காமல் சில வியாபாரிகள் பாலாற்றில், மக்கள் செல்லக்கூடிய பாதைகளில் பொது இடங்களில் கொட்டிச் செல்கின்றனர். அதனை குழந்தைகள் எடுத்து சாப்பிட கூடிய சூழல் உருவாவதால் இதுபோன்ற தின்பண்டங்களை பொது இடங்களில் கொட்டி செல்லும் வியாபாரிகள் மீது உணவுப் பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சத்துவாச்சாரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.