திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை அருகே உள்ள பாலப்பட்டியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவருக்கு சொந்தமான பட்டா நிலம் ஊரின் அருகே உள்ள மாமுண்டி ஆற்றங்கரையில் உள்ளது. ஆற்றில் தண்ணீர் சென்ற போது கரை புரண்டு ஓடிய தண்ணீரால் மணல் அடித்து வரப்பட்டதால் அவருடைய நிலத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மணல் தேங்கியுள்ளது.
கடந்த ஓராண்டிற்கு முன்னர் அவருடைய நிலத்தில் இருந்த மணலை திருட்டுத்தனமாக சிலர் வெட்டிக்கடத்திய போது பொதுமக்கள் தடுத்து மணல் அள்ள வந்த லாரியையும் சிறை பிடித்து போராட்டம் நடத்தினார்கள். அப்போது மணல் திருட்டும் நிறுத்தப்பட்டது. அப்போது இந்த பிரச்சனை பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் தற்போது திருச்சியில் புதிதாக பூங்க அமைக்கும் பணிக்காக சாமிக்கண்ணு நிலத்தில் உள்ள மணலை அள்ள கலெக்டர் சிவராசு அனுமதி அளித்தாக சொல்லி ஜே.சி.பி. மற்றும் டிப்பர் லாரிகளுடன் அதிகாரிகள் சிலர் வந்திருக்கிறார்கள். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் பொதுமக்களுடன் இணைந்து வாகனங்களை மறித்தும் பேராட்டத்தில் ஈடுபட்டனர். மணப்பாறை தாசில்தார் சித்ரா, மற்றும் ஆர்.ஐ. கந்தசாமி மற்றும் வருவாய்துறையினரை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
பிறகு விவசாயிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் 22 லோடு மணல் அள்ள மட்டும் கலெக்டர் அனுமதி அளித்துள்ளதாக சொல்லியிருக்கிறார்கள். கலெக்டர் அனுமதி அளித்ததை விட அள்ளக்கூடாது என்கிற உத்தரவாதத்துடன் மணல் அள்ளுவதை வீடியோ எடுக்க வேண்டும் என்கிற உறுதிமொழியுடன் மணல் அள்ளுவதை சம்மதித்தனர் விவசாயிகள்.
திருட்டு மணலை தடுக்கும் பொதுமக்கள் இருக்கும் இதே திருச்சியில் தான் அதே இடத்தில் அரசாங்கத்திற்கு மணல் அள்ள உத்தரவு போட்டும் கலெக்டரும் இருக்கிறார்.