நாகையில் பெய்து வரும் கனமழையினால் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பராமரிப்பின்றி பாழடைந்து சேரும் சகதியுமாக இருக்கும் சாலையில் கிராம மக்கள் நாட்டுப்புறப் பாடலைப் பாடியபடி நாற்று நட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை ஒன்றியம் வடகுடி ஊராட்சி பகுதாயம் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கூலித் தொழிலாளிகளான அந்த மக்களுக்கு சாலை வசதிகளோ, மின்விளக்கு வசதிகளோ, ஏன் குடிநீர்த் தொட்டி உள்ளிட்ட எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் 35 ஆண்டுகளாக இருந்து வருகின்றனர். அடிப்படை வசதிகளைக் கேட்டு கடந்த 35 வருடங்களாகப் பல்வேறு வகையான போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஒருவார காலமாக நாகை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழைக் காரணமாக சீரமைக்காமல் கிடந்த சாலைகள் சேரும் சகதியுமாகப் படு மோசமாக மாறி நடக்கக்கூட முடியாதபடி மாறி கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மழைக்காலம் வந்தாலே கடும் சிரமத்தை சந்திக்கும் அந்த கிராம மக்கள் இன்று சேரும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மழையில் நனைந்தபடி நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், “பல ஆண்டுகளாகப் பழுதடைந்துள்ள 2 கிலோ மீட்டர் சாலையை சீரமைத்துத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் விளக்கு வசதி ஏற்படுத்தவும், பயன்படாத மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைச் சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த சாலையில் ஆபத்துக் காலங்களில் அவசர ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட எங்கள் கிராமத்திற்கு உள்ளே வருவதில்லை” என்று வேதனை தெரிவிக்கிறார்கள் அந்த கிராம மக்கள். தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.