கரூர் மாவட்டம் புகழூரில் ஈ.ஐ.டி. பாரி எனும் சர்க்கரை ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலை கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. ஆலையைச் சுற்றி தளவாபாளையம், புகலூர் நால்ரோடு, தோட்டக்குறிச்சி, செம்படாபாளையம் ஆகிய பகுதிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் 300க்கும் மேற்பட்டோர் இன்று அந்த ஆலையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ‘சர்க்கரை தயாரிக்கும் இயந்திரத்தில் இருந்து வெளிவரும் புகையின் ஃபில்டர் பகுதி பழுது அடைந்து உள்ளதால், அதிலிருந்து வரும் கரி துகள்கள் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் விழுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. ஆலையிலிருந்து வெளிவரும் கரி தூள்கள் வீடுகளில் படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆஸ்துமா, சளி, காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகள் ஏற்படுகிறது.
அதேபோல் ஆலையிலிருந்து வெளிவரும் கழிவுநீர் இரவு நேரங்களில் வாய்க்கால்களில் கலப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. பல முறை ஆலை நிர்வாகத்திடமும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமும் முறையிட்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இன்று புகழூர் சர்க்கரை ஆலை வாயில் முன்பு 300க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்’ என்றனர். ஆலையின் முன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரவக்குறிச்சி டி.எஸ்.பி முத்தமிழ்செல்வன், வேலாயுதம்பாளையம் போலீசார், வட்டாட்சியர் மோகன்ராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், தற்போது ஆடி மாதம் துவங்க இருப்பதால், அதிக அளவில் கரி துகள்கள் வீடுகளில் வீசப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு பிறகு இரண்டு மணி நேரம் கழித்து போராட்டம் கைவிடப்பட்டது.