இளையராஜா தனது பாடல்களுக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இது தொடர்பாக நடந்த விசரணையில், “பாடல் வரிகள், பாடகர்கள் என அனைத்தும் சேர்ந்து தான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும் போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்” என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். இந்த சூழலில் தான், ஒரு இசை வெளியீட்டு விழாவில் பேசிய வைரமுத்து, “இசை எவ்வளவு பெரிதோ, மொழி அவ்வளவு பெரிது, மொழி எவ்வளவு பெரிதோ, இசை அவ்வளவு பெரிது. இதை புரிந்து கொள்பவன் ஞானி. புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி” என்றிருந்தார்.
இதையடுத்து இளையராஜாவின் தம்பியும் இயக்குநருமான கங்கை அமரன், “வைரமுத்து எங்களால் தூக்கிவிடப்பட்டவர். எங்களால் லிஃப்டில் ஏறி பாட்டு எழுதியவர். அவர் உட்கார்ந்த சேரை தூக்குப் போட்டு மிதிப்பது போல பேசியிருக்கார். மனுஷனுக்கு எப்போதுமே ஒரு நன்றி வேண்டும்” என குறிப்பிட்டு கடுமையாக கண்டித்திருந்தார். இதன் பிறகு இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக மாறியது.
இந்த நிலையில் மதுரை வலையங்குளத்தில் நடந்த வணிகர் சங்க மாநாட்டில் கவிஞர் வைரமுத்து, பங்கேற்று உரையாற்றினார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் இளையராஜா விவகாரம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, பதிலளிக்க மறுத்துவிட்டார். பின்பு அவரிடம், எம்.எஸ்.வி யா கண்ணதாசனா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “உடலா உயிரா? எம்.எஸ்.வியா? கண்ணதாசனா? என்று கேட்டால், உடலா உயிரா என்ற கேள்விக்கும் என்ன பதில் வருமோ, அந்த பதில் தான் வரும். எம்.எஸ்.வி உயிராக இருந்திருக்கிறார். கண்ணதாசன் தமிழ் வழியாக உடலாக இருந்திருக்கிறார். உடலும் உயிரும் கூடி இயங்கியதால் தான் இலக்கியம் என்ற குழந்தை பிறந்திருக்கிறது” என்றார்.