வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்காடு செல்லும் சாலையில் உள்ள வி.டி.கே நகர், அன்னை நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்க ஜல்லி கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை முறையான சாலை வசதி செய்து தரவில்லை எனவும், இதனால் அடிக்கடி பள்ளி, கல்லூரி மற்றும் அன்றாட பணிக்குச் செல்பவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் சாலையில் தவறி விழுந்து காயம் ஏற்படுவதாவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும் இது தொடர்பாக கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் இன்று காட்பாடியில் இருந்து சேர்காடு செல்லும் சாலையின் குறுக்கே மரக்கட்டைகளையும், கற்களையும் வைத்து அரசு பேருந்தைச் சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி காவல் துறையினர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி பெண்கள், “இங்கு உள்ள டாஸ்மாக் கடைக்குப் போக ரோடு போடத் தெரியுது. ஆனால் எங்கள் பகுதியில் நடக்க ரோடு போடத் தெரியவில்லையா? எங்கள் பகுதியில் உள்ள ஏரியில் அளவிற்கு அதிகமாக லாரிகள் மூலம் மண் அள்ளி செல்கிறார்கள். ஆனால் எங்கள் பகுதிக்குச் சாலை அமைக்க மாட்டேங்கிறாங்க” என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.