வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இந்த நிலையில், "மழை பாதிப்புள்ள பகுதிகளில் அத்தியாவசியமின்றி மக்கள் வெளியே செல்ல வேண்டாம். அத்தியாவசியமின்றி வெளியே செல்லாமல் இருப்பதன் மூலம் விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தவிர்க்கலாம். இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் கனமழை முன்னறிவிப்பைக் கருதி மக்கள் விழிப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்" என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.