ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஈரோடு மாவட்ட நிர்வாகம் விரைவாக செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெருந்துறையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முழுமையாக கரோனா சிகிச்சைக்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
இங்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகாமையிலுள்ள நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களிலிருந்தும் மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 550 படுக்கைகளும் ஏற்கனவே நிரம்பிய நிலையில் கடந்த ஒரே வாரத்தில் புதிதாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டது. அதை இன்று வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேலும் 800 ஆக்சிஜன் படுக்கைகள் விரைவில் அமைக்கப்பட உள்ளது. அதற்காக பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது என்றார். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் நிலையில் பொதுமக்கள் ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அரசு மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.