Skip to main content

மக்கள் வாக்களிக்க மறுப்பு - வெறிச்சோடிய வாக்குச்சாவடி!!

Published on 06/10/2021 | Edited on 06/10/2021

 

க

 

வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்டது அம்முண்டி ஊராட்சி. இங்கு மொத்தம் 2,049 வாக்குகள் உள்ளன. இடஒதுக்கீட்டில் இந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியலின பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் மட்டுமே உள்ளனர். அவர்களும் கலப்பு திருமணம் செய்தவர்கள். பட்டியலின வாக்கு அதிகம் இல்லாத அம்முண்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியலின பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், ஊராட்சித் தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, அம்முண்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கக் கோரி அந்த ஊராட்சி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 

இதற்கு அரசுத்தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் ஊராட்சி பொதுமக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதுடன், அம்முண்டி ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சியிலுள்ள 9 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. உள்ளாட்சித் தேர்தலின்போது மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் இந்த ஊராட்சி மக்கள் யாரும் வாக்களிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தனர். ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு காட்பாடி ஒன்றியத்தில் அக்டோபர் 6 ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கின. அம்முண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

 

இந்த வாக்குச்சாவடிகளில் அம்முண்டி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் யாரும் வாக்களிக்கவில்லை. இதனால்  வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டது. திருவலம் போலீசார் கிராம மக்களிடம் வாக்களிக்கவேண்டுமெனப்  பேச்சுவார்த்தை நடத்தினர். வாக்களிக்க யாரும் முன்வரவில்லை. தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை வாக்களிக்க மாட்டோம் எனப் பொதுமக்கள் தெரிவித்தனர்.  அந்த ஊராட்சிப் பகுதியில் உள்ள வீடுகள், கடைகள் முன்பாக கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பையும் தெரிவித்திருந்தனர். பொதுமக்கள் கட்டியிருந்த கருப்புக் கொடிகளை போலீசார் அகற்றினர்.

 

 

சார்ந்த செய்திகள்