கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மருங்கூர் கிராமத்தில் சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இதன் மூலம் அப்பகுதியை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திட்டக்குடி வெலிங்டன் நீர் தேக்கத்திலிருந்து இப்பகுதிக்கு வரும் பிரதான பாசன வாய்க்கால்களை தூர்வாரும் பணியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர். அப்போது கருவேப்பிலங்குறிச்சி அடுத்த மேலப்பாளையூர் வரை வாய்க்கால்களை தூர்வாரி விட்டு, அதற்கு அடுத்தாற்போல் உள்ள மருங்கூர் ஏரிக்குச் செல்லும் வாய்க்கால்களை மட்டும் தூர்வாராமல் கிடப்பில் போட்டுவிட்டு சென்று விட்டனர். மேலும் இந்த வாய்க்கால்களை தனிநபர் சிலர் ஆக்கிரமித்துக் கொண்டு வாய்க்கால்களில் விவசாயம் செய்தும் வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி வரும் நிலையில் மருங்கூர் ஏரிக்கு வரும் பாசன வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பால் ஏரிக்கு நீர்வரத்து தடைபட்டுள்ளது. மேலும் வாய்க்கால்கள் வழியே ஏரிக்கு வரும் நீர் அனைத்தும் அருகே உள்ள விவசாய நிலங்களில் நேரடியாக பாய்ந்து தற்போது விவசாய நிலங்களில் உள்ள நெற்பயிர்கள் அனைத்தும் மூழ்கி உள்ளது. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் பவழங்குடி- விருத்தாசலம் சாலையில் மருங்கூரில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில், "திட்டக்குடி வெலிங்டன் ஏரியில் இருந்து வரும், நீர் பாசன வாய்க்கால் மருங்கூர் ஏரியை வந்தடைந்து பின்பு ஏரி நீர் முழுவதும் நிரம்பி அருகே உள்ள காவனூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும் நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது மேலப்பாளையூருக்கும்- மருங்கூறுக்கும் இடையே வாய்க்காலை தூர் வாராமல் பொதுப்பணித்துறையினர், தூர்வாரியதுபோல் கணக்கு காட்டி முறைகேடு செய்துள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்தனர். இதனால் ஏரிக்கு வர வேண்டிய தண்ணீர் அனைத்தும் விவசாய நிலங்களில் பாய்ந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது" என பொதுமக்கள் கூறினர். அதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கூறி அதற்கு உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததன் பேரில் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த திடீர் சாலை மறியலால் பவழங்குடி - விருத்தாசலம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.