Skip to main content

சாலையோரம் நடமாடும் 2 சிறுத்தைகளால் மக்கள் பீதி

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
People panic because of 2 leopards roaming along the road

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான் காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதில் யானை, சிறுத்தை, புலி வனப் பகுதிகளை விட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதும், விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகளை வேட்டையாடி வருவது வாடிக்கையாகி வருகின்றன.

சில சமயம் யானை தாக்குதல்களால் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் சிறுத்தை உலா வருவதைக் கண்ட பொதுமக்கள் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அப்பகுதியில் இருந்த கால் தடயங்களை ஆய்வு செய்து ஊருக்குள் உலா வருவது சிறுத்தையா என கண்காணிக்கும் வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் கிராமம் கக்கரா குட்டையில் இருந்து கேத்தம்பாளையம் செல்லும் வழி சாலையோரம் இரண்டு சிறுத்தைகள் உலா வந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை வரும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனைப் பார்த்து வீதி அடைந்த அக்கிராம மக்கள் ஊருக்குள் உலா வரும் சிறுத்தைகளை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் கிராமம் கக்கரா குட்டையில் இருந்து கேத்தம்பாளையம் செல்லும் வழி சாலையோரம் இரண்டு சிறுத்தைகள் உலா வருவதுபோன்று வீடியோ வெளியாகி உள்ளது. எனவே இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் வாகன ஓட்டிகள் இந்த பகுதியில் செல்லும் போது மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். இந்தப் பகுதிகளில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டால் கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

சார்ந்த செய்திகள்