கோவை மாவட்டம் ஆனைக்கட்டி மலைப் பகுதியில் அதிகமான வனவிலங்குகள் உள்ளன. அதிலும் அங்கு அதிகமான யானைகள், காட்டெருமைகள் போன்றவை சுற்றித்திரியும் பகுதியாக இது உள்ளது. இந்நிலையில் தற்போது தண்ணீர் தேடி யானைகள் வனப் பகுதிக்குள் இருந்து ஊருக்குள் வருவது வழக்கமாகி வருகிறது. அதே போல் நேற்று முன்தினம் ஆனைக்கட்டி சாலையில் உள்ள தனியார் சேம்பர் ஒன்றில் தண்ணீர் குடிக்க வந்த யானை அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் பார்த்து தண்ணீரைக் குடிக்காமல் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று அதே யானை அப்பகுதியில் நின்று கொண்டிருக்கும் போது அங்கு இரு சக்கர வாகனத்தில் பயணித்தவர்கள் யானையை வீடியோ எடுத்தபடி ஹார்ன் அடித்தனர். இதனால் மிரண்டுபோய் கோபமடைந்த யானை தனது காலால் தரையைத் தட்டி தனது கோபத்தை வெளிப்படுத்தியது. வனப்பகுதிக்குள் பயணிக்கும் பொழுது காட்டு விலங்குகளுக்கு இடையூறு விளைவிக்கும் வண்ணம் ஒலி எழுப்பக் கூடாது என்றும் அது காட்டு விலங்குகளைக் கோபமடையச் செய்யும் என்றும் வனத்துறையினர் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், இதுபோன்ற சிலரின் அலட்சிய செயல்களால் காட்டு விலங்குகள் கோபம் கொண்டு மனிதர்களைத் தாக்கும் சம்பவங்கள் நடக்கின்றன.
இது அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்து வருவதோடு, வனப்பகுதிக்குள் நுழையும் பொழுது வனவிலங்குகளை வீடியோ எடுப்பது ஒலி எழுப்புவது போன்ற செயல்களைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.