தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகில் நேற்று (30.11.2024) மாலை 5 மணி அளவில் கரையைக் கடக்கத் துவங்கியது. நேற்று இரவு 10.30 மணிக்கும் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்துள்ளது. இது புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இது தொடர்ந்து மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் தேங்கிய இடங்களில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இயல்பு நிலை திரும்பிய பகுதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு மக்களை சந்தித்தார். அது தொடர்பான வீடியோ காட்சியை எக்ஸ் வலைத்தள பக்கத்தில் எழுதி வெளியிட்டிருக்கும் தமிழக முதல்வர், பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் 'தூங்கி வழிந்த நிர்வாகத்தால் - மனிதத் தவறுகளால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அ.தி.மு.க. ஆட்சிக்காலம்! இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம், நமது திராவிட மாடல் ஆட்சிக்காலம்! இயல்பு நிலை திரும்பிய பகுதிகளைப் பார்வையிட்டபோது, மக்களின் அன்பையும் வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டு, விழுப்புரம் - திண்டிவனம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர்செய்யக் களத்தில் பணியாற்றும் துணை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுடன் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டேன்' என தெரிவித்துள்ளார்.
தூங்கி வழிந்த நிர்வாகத்தால் - மனிதத்தவறுகளால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அ.தி.மு.க. ஆட்சிக்காலம்!
— M.K.Stalin (@mkstalin) December 1, 2024
இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம், நமது #DravidianModel ஆட்சிக்காலம்!
இயல்புநிலை திரும்பிய பகுதிகளைப் பார்வையிட்டபோது,… pic.twitter.com/PX6dDUWA1F