கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை கடை வீதியில் வானவில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சூதாட்ட கிளப் நடப்பதாக கரூர் மாவட்ட கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்று மாலை மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு போலீசார் திடீரென வானவில் மனமகிழ் மன்றத்திற்கு நுழைந்தனர். அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த தோகைமலை கருப்பு கோவில் செல்வம், தினேஷ், ராக்கம்பட்டி பொன்னுசாமி, சங்காயிபட்டி சரவணன், நாடக்காப்பட்டி பொன்னுசாமி, தோகைமலை மகேஸ்வரன், உப்பிலியாப்பட்டி ஆனந்த், வடிவேல், சங்காபதி விஜயன், கன்னிமார் பாளையம் குமரேசன், சமுதாயப்பட்டி பழனிசாமி, உள்ளிட்ட 11 பேரையும் பிடித்து அவர்களிடமிருந்து ரூபாய் 29 ஆயிரத்து 625 மற்றும் 10 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை தோகைமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து தோகைமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து குளித்தலை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, பின்னர் குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி தினேஷ்குமார், அவர்களை நீதிமன்ற பிணையில் விடுவித்தார். மாவட்ட எல்லை பகுதியாக தோகைமலை இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் இதுபோன்ற மது, கஞ்சா, லாட்டரி, குற்ற சம்பவங்கள் நடைபெற்றாலும் போலீஸ் கண்டும் காணாதது போல் நடவடிக்கை எடுப்பதில்லை என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் குற்றச்சாட்டாகக் கூறி வருகிறார்கள்.