சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல்லில் இருந்து சென்னை நோக்கி மினி லாரி ஒன்று வந்தது. அந்த லாரி நிறைய திராட்சை பழங்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ராஜேஷ் என்பவர் ஓட்டிச் சென்றார். இந்த லாரி நேற்று உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானா அருகில் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று லாரியின் முன்பக்க டயர் வெடித்தது.
இதனால் மினி லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் ராஜேஷ் காயம் எதுவுமின்றி தப்பினார். லாரியில் இருந்த திராட்சை பழங்கள் சாலையில் கொட்டி சிதறியது. இதையறிந்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அட்டைப்பெட்டிகளில் சாலையில் சிதறிக் கிடந்த திராட்சை பழங்களை அள்ளிச் சென்றனர்.
இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீஸார் விரைந்து வந்து திராட்சை பழங்களை அள்ளி சென்ற பொதுமக்களை கலைத்துவிட்டு போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதேபோன்று அத்தியாவசியப் பொருட்கள் பழங்கள் ஏற்றிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும்போது அந்தப் பகுதியில் உள்ள கிராம மக்கள் சாலையில் செல்வோர் பொருட்களையும் பழங்களையும் அள்ளிச் செல்லும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. மேலும் விபத்தின்போது வாகனத்தில் வந்தவர்கள் என்ன ஆனார்கள் விபத்தில் சிக்கிக்கொண்ட அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விட வாகனத்திலிருந்து சிதறி ஓடிய பொருட்களை அள்ளிச் செல்வதில் மட்டுமே குறியாக உள்ளனர். இப்படிப்பட்ட மக்களை என்னவென்று சொல்வது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.