








கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் பலருக்கு, ரெம்டெசிவிர் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது. அதன்படி, தமிழக மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்யப்படுகிறது. அதனை வாங்குவதற்காக, தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதனால், கரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மருந்துகளை வாங்குவதற்கு வந்த பயனாளி ஒருவர், “நேற்று நான் மருந்துகள் வாங்குவதற்காக வந்தேன். மூன்று மணி நேரம் காத்திருப்புக்குப் பின்னர் டோக்கன் ஒன்று கொடுத்து அனுப்பினர். அதன்படி இன்று வந்து நான் மருந்துகளைப் பெற்றுக்கொண்டேன்” என தெரிவித்தார்.
மேலும் ஒருவர் இதுகுறித்து கூறியதாவது, “நோயாளிகளின் ஆதார் கார்ட், ஸ்கேன் நகல், மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் என அனைத்தும் கேட்கிறார்கள். அதை நாங்கள் கொடுக்கிறோம். ஆனால் அதை எல்லாம் வாங்கி வைத்து குறித்து வைத்துக்கொண்டு அனுப்புவதற்கு ஏன் 10 நிமிடங்கள்? ஒவ்வொருவருக்கும் 10 நிமிடங்கள் என்றால் இங்கு இருக்கும் அனைவருக்கும் எவ்வளவு நேரம் ஆகும்.
பணத்தைக் கையில் கொடுத்து வாங்குகிறோம். எந்தவித இணையவழி பரிவர்த்தனையும் கிடையாது. பின்னர் ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறார்கள். நான் பசியாறுவதற்கு பீட்சா வாங்க வரவில்லை, அங்கு பலர் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள்” என அதிருப்தியில் கடுமையாக பல கேள்விகளைக் கேட்டார்.