Skip to main content

“மீனவ மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Published on 24/07/2024 | Edited on 24/07/2024
The people of fishermen are very distressed Chief Minister MK Stalin

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 600 பேர் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்து விட்டு நேற்று (23.07.2024) அதிகாலை 03:00 மணியிலிருந்து 04:00 மணிக்குள் கரை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து கைதான 9 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்த விசாரணைக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்து பறிமுதல் செய்தனர்.

The people of fishermen are very distressed Chief Minister MK Stalin

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (24-07-2024) கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் 22-7-2024 அன்று IND-TN-10-MM-2517 மற்றும் IND-TN-100-MM-284 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், அவர்களும், அவர்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது ஜூலை 22 ஆம் நாள் வரை மட்டும் 250 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில், ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிக அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.

The people of fishermen are very distressed Chief Minister MK Stalin

மீனவர்கள் இதுபோன்று அச்சுறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகள், கருவிகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து தடையின்றி நடைபெற்று வருகின்றனர். இதனால் மீனவ மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, இந்த நிலைமையைத் தணித்திட உரிய தூதரக முயற்சிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும், பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து இலங்கையிலிருந்து 87 மீனவர்களையும், 175 படகுகளையும் விரைவாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்