கரூர் மாவட்டம் க.பரமத்தியை அருகே உள்ள காருடையாம்பாளையம் கிராமத்தில் பட்டியலின சமுதாயத்தை சார்ந்தவர்கள் தலைமுறை, தலைமுறையாக வசித்து வருகின்றனர். இச்சமுதாயத்திற்கு என்று எரிப்பதற்கு, புதைப்பதற்கு என 2 சுடுகாடுகள் உள்ளது. கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது 2 சுடுகாடுகளின் அளவு குறைந்து போய் விட்டது. எரிக்கும் சுடுகாட்டிற்கு பின்புறம் உள்ள காட்டின் உரிமையாளர் இப்பகுதியில் சடலங்களை எதுவும் எரிக்கக் கூடாது என நீதிமன்றம் சென்று தடை வாங்கி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
புதைக்கும் சுடுகாட்டிற்கு ஒட்டிய விவசாய காட்டுப் பகுதி தற்போது வீட்டு மனையாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மூதாட்டி ஒருவர் இறந்து விட அவரை புதைக்கும் சுடுகாட்டில் புதைக்கக் கூடாது என எதிர்ப்பு எழுந்ததால், கடைசியாக அந்த மூதாட்டிக்கு மட்டும் அங்கு புதைக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவர்களது கிராமத்தை ஒட்டிய பகுதியில் 5 சென்ட் நிலம் அரசால் வழங்கப்பட்டு அங்கு புதைத்து மற்றும் எரித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் பழனியம்மாள் என்கின்ற 95 வயது மூதாட்டி நேற்று மதியம் இயற்கை எய்தினார். அந்த மூதாட்டியின் உடலை அவர்கள் பரம்பரை பரம்பரையாக எரிக்கப்படும் இடத்திற்கு எடுத்துச் செல்வதற்காக அவர்களின் உறவினர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். ஆனால், வருவாய் மற்றும் காவல் துறையினர் அங்கு எடுத்துச் செல்லக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அரசால் வழங்கப்பட்ட 5 சென்ட் நிலத்திற்கு எடுத்துச் செல்ல முயன்ற போது, மாற்று சமூகத்தை சார்ந்தவர்கள் தங்களுடைய கோவிலை கடந்து இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லக் கூடாது என அவர்கள் எதிர்ப்பு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து அங்கு எதிர்ப்பு தெரிவித்த 10க்கும் மேற்பட்ட பெண்களை போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மூதாட்டியின் உடலை நாங்கள் தலைமுறை தலைமுறையாக எரிக்கும் இடத்திற்கே எங்களை அனுமதிக்க வேண்டும் எனக் கூறி அந்த கிராமத்தின் மையப் பகுதியில் சாலையில் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கரூர் - கோவை சாலையில் புதைக்கும் இடத்திற்கு வாகனத்தில் எடுத்து வந்தனர். அங்கு எரிப்பதற்கான அடிப்படை ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போது, அதற்கு மூதாட்டியின் உறவினர்களின் ஒரு பிரிவினர் புதைக்க கூடிய இடத்தில் எரிக்கக் கூடாது எனவும், எரிக்கக் கூடிய இடத்திற்கு எடுத்துச் சென்று எரிக்க வேண்டும் எனக் கூறி காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கரூர் கோவை சாலையில் காருடையாம் பாளையம் பிரிவு அருகே, அப்பகுதியில் புதிய வீட்டுமனைப் பிரிவு பிரிக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு முன்புறம் தற்காலிக அடுப்பு ஏற்பாடு செய்து மூதாட்டியின் உடலை எரியூட்டினர். இதனால் சுமார் 4 மணி நேர போராட்டம் முடிவிற்கு வந்தது. அடுத்து அச்சமூகத்தை சார்ந்தவர்கள் இயற்கை எய்துவதற்குள் தங்களுக்கு என்று ஒரு சுடுகாட்டை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கி, அதற்கான சுற்றுச் சுவர் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.