புதுக்கோட்டை மாவட்டத்தில் பல வருடங்களுக்கு பிறகு, இந்த ஆண்டு தான் குளங்களில் தண்ணீர் நிரம்பும் அளவில் மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து வந்தாலும், கடந்த 10 நாட்களில் நடக்கும் துயர சம்பவங்களால் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு விராலிமலை அருகில் உள்ள ஆவூர் கிராமத்தில் சின்னக்குளத்தில் தண்ணீர் நிறைந்திருப்பதை பார்த்து ஆனந்தமாக குளிக்கச் சென்ற 3 மாணவர்கள் சேற்றில் சிக்கி மூச்சு திணறி பலியானார்கள். அந்த சோகம் மறைவதற்குள் கடந்த 2- ஆம் தேதி கந்தர்வகோட்டை அருகில் உள்ள மங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த 8- ஆம் வகுப்பு மாணவன் அந்தோணிசாமி மகன் ஸ்டீபன்ராஜ். பாரதப் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை பள்ளியில் மட்டுமல்ல, தனது தெருவிலும் செயல்படுத்தி அனைவராலும் பாராட்டப்பட்ட மாணவன் மங்கனூர் பெரிய குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்று நடுக்குளத்திற்கு சென்று திரும்ப முடியாமல் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
நல்ல ஒரு இளம் சமூகப் போராளியை இழந்து விட்டோம் என்று கிராமமே கண்ணீர் வடித்தது. இந்த மாணவன் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை தொடர்ந்து கடைப்பிடித்தான் என்பதால் அவனது குடும்பத்திற்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர்.
இந்த சோகத்திலிருந்து கந்தர்வகோட்டை மக்கள் மீளாத நிலையில் தான் இன்று அடுத்த சம்பவம் நடந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுக்கா சின்னக்கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் மகன் கிஷோர் குமார்(8). 3- ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக விடுமுறை என்பதால், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கோவிலூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு கிஷோர்குமார் வந்துள்ளார். இந்நிலையில் உறவினர் பரமேஸ்வரியுடன், அங்கு உள்ள சங்கு ஊரணியில் கிஷோர் குமார் குளிக்க சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக குளத்தில் மூழ்கிய கிஷோர்குமார், அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக கந்தர்வகோட்டை போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அப்பகுதி தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, பல வருடங்களுக்கு பிறகு தண்ணீர் நிறைந்துள்ள குளக்கரைகளில் எச்சரிக்கை பதாகைகளை வைத்துள்ளனர். மேலும் இதேபோல் ஒவ்வொரு கிராமத்திலும் தண்ணீர் நிறைந்துள்ள குளங்களில் எச்சரிக்கை பதாகைகள் வைத்தால் நல்லது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.