புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக பொறுப்பேற்றுள்ள கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மாவட்ட காவல் துறை சார்பில் கிராம பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.
![People are the intelligence-SP told local government representatives](http://image.nakkheeran.in/cdn/farfuture/n_5GaGct5r3cNVc8NMVEwMhTz9CB2YqyAtslpD5C98w/1579060291/sites/default/files/inline-images/11111_28.jpg)
கூட்டத்தை தொடங்கி வைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் பேசும் போது, "கிராம ஊராட்சியில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் பிரதிநிதிதான் ஊராட்சி மன்றத் தலைவர். அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருப்பவர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்கள்தான். வாக்களித்து தங்களை வெற்றி பெறச் செய்து இந்த உயர்ந்த பொறுப்பை கொடுத்துள்ள பொது மக்களுக்கு விருப்பு வெறுப்பின்றி மனசாட்சியோடு பணியாற்றுங்கள்.
ஊராட்சிகளில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியோ அல்லது தாங்கள் பங்கேற்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாகவோ சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது, தலைக்கவசம் அணிவது, சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை ஊராட்சி மன்றத் தலைவர்கள் அந்தந்த கிராம மக்களுக்கு அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
24 மணி நேரமும் தூங்காத, கட்சி, சாதி, மத பாகுபாடு இல்லாத ஒரு காவலரை நியமித்துக் கண்காணிப்பதற்கு இணையான பணியை கண்காணிப்பு கேமராக்கள் செய்கிறது. உள்ளதை உள்ளபடி படம் பிடித்து காட்டிவிடும். இது உங்கள் பகுதிகளில் நடக்கும் குற்றங்களைத் தடுக்கவும், குற்ற செயல்களை கண்டறியவும் பெரிதும் உதவியாக இருப்பதால் கிராமங்களில் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் முன்வர வேண்டும்.
அதே போல எஸ்.ஒ.எஸ். காவலன் செயலியை அனைவரது செல்போன்களிலும் பதிவிறக்கம்செய்து பயன்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும். இந்த செயலி மூலம் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பல இடங்களில் பெண்களுக்கான பிரச்சனைகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் செல்லக்கூடிய இடங்களில் எனது செல்போன் எண்ணைக் கொடுத்து வருகிறேன். மேலும், எனது மேற்பார்வையில் இம்மாவட்டத்தில் 'ஹலோ போலீஸ்' எனும் செயலியும் (எண் 7293911100) சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஹலோ போலீஸ் செயலி தொடங்கி 35 நாட்களில் 200-க்கும் மேற்பட்ட தகவல்கள் பெறப்பட்டன.
அவற்றில், 59 சம்பவங்களுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் எனது கவனத்துக்கு கொண்டுவாருங்கள். செல்போனில் பேசவில்லை என்றாலும் எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் மூலம் பதிவிடலாம். வீடியோ எடுத்தும் அனுப்பலாம். என்னிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறையில் உள்ள உளவுத்துறையைவிட மக்கள்தான் எனக்கு உளவுத்துறை. மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே காவல் துறை செயல்பட்டு வருகிறது. அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்" என தெரிவித்தார்.