நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் மதுரையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட ராஜன் செல்லப்பா செய்தியாளர்களைச் சந்தித்து பேசுவையில், ''எங்களுக்கு வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருக்கிறது. நம்முடைய வேட்பாளர் நல்ல வேட்பாளர். ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடியவர் மீது அதிருப்தி மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. 'கண்டா வரச் சொல்லுங்க' என்ற அந்த போஸ்டர் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏனென்றால் இந்த பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மக்களை சந்தித்ததே இல்லை. எந்த வகையிலும் சந்திக்காத ஒருவர் மீண்டும் வருகிறார் என்கிற பொழுது மக்கள் எதிர்ப்பை வைத்திருக்கிறார்கள்.
ஓபிஎஸ்க்கு தெரியும் ஜெயிக்க முடியாது என்று. இருக்கின்ற எம்எல்ஏ பதவி கொஞ்ச நாள் வச்சிருப்போம், தேர்தல் முடிந்தவுடன் அவருடைய சட்டமன்ற பதவியை இழக்க நேரிடப் போகுது. ஓபிஎஸ் என்ற பெயர் வைத்தோம் இனிமேல் அவரை பலாப்பழம் என்று தான் மக்கள் கூப்பிடப் போகிறார்கள். அப்படி ஒரு ஏளனமான சூழ்நிலையில் அவர் இருக்கிறார். தேவையில்லாத வேலைகளை செய்து இன்று தன்னை தானே இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறார் ஓபிஎஸ். அரசாங்க பணத்தை வீணடிக்க இப்படி செய்கிறார் அல்லது தோல்வியை சந்திப்போம் என்று தெரிந்தும் நிற்கிறார். இதுதான் உண்மையான நிலைமை.
டி.டி.வி.தினகரன் தேவையில்லாமல் ஏன் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி போட்டியிடவில்லை என கேட்கிறார். ஒருவேளை அதிமுக நாற்பது தொகுதிகளிலும் ஜெயிச்சு சின்ன சின்ன கட்சிகள் இந்தியா முழுக்க ஒன்று சேர்ந்து கூட்டணி ஆட்சி வரும் வாய்ப்பு இருந்தால் எடப்பாடியை ராஜ்ய சபா எம்பியாக தேர்ந்தெடுத்து இந்திய துணைக் கண்டத்திற்கு பிரதமர் ஆவார்.
இந்தியாவில் இருக்கிற எல்லா சிறு கட்சிகளும் சேர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சி தந்திரம் மிக்கவர் என உணர்ந்து அவரை பிரதமராக அறிவிக்க நினைத்தால் எப்படி தேவகவுடா பிரதமர் ஆனாரோ அது மாதிரி ஆகட்டும்''என்றார்.