Skip to main content

'நிலுவையில் கிடக்கும் மனு'- தவெகவிற்கு கிடைக்குமா அனுமதி?

Published on 01/09/2024 | Edited on 01/09/2024
 'Pending Petition'- Will Thaveka get permission?

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி அண்மையில் பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் கட்சிக்கான பாடலும் வெளியிடப்பட்டிருந்தது. சிகப்பு, மஞ்சள் நிறத்தில் இருந்த கொடியின் மத்தியில் யானைகள் வாகைப்பூ, 28 நட்சத்திரங்கள் எனப் பல அடையாளங்களும், குறியீடுகளும் இடம்பெற்றிருந்தன.

கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடைபெற இருக்கும் மாநாட்டில் தெரிவிப்போம் அதுவரை கட்சியினர் கட்சிக் கொடியை முறையாக அனுமதி பெற்று ஏற்றிக் கொண்டாடுங்கள் என விஜய் தெரிவித்திருந்தார். தொடர்ந்து செப்.23 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருப்பதாகவும் அதற்காக பாதுகாப்பு மற்றும் அனுமதியை த.வெ.க கோரியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநாட்டிற்கான அனுமதிகோரி கடந்த 28 ஆம் தேதி விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். புஸ்ஸி ஆனந்த் எஸ்.பி அலுவலகத்தில் மனுகொடுக்க சென்ற பொழுது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இல்லை. அதனால் அவருக்கு அடுத்தகட்டமாக உள்ள அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு கொடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கொடுத்த மனு தொடர்ந்து பரிசீலனையில் இருப்பதாக விழுப்புரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட காவல் ஆணையர் தீபக் சிவாச் விடுமுறையில் இருப்பதால் முடிவெடுப்பதில் தாமதம் இருப்பதாகவும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால் தெரிவித்துள்ளார். விடுமுறை முடிந்து நாளை விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் பணிக்கு திரும்பிய பிறகு மாநாட்டிற்கு அனுமதி கிடைப்பது தொடர்பான தகவல் தெரிய வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

சார்ந்த செய்திகள்