மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞருக்கு சென்னை மெரினாவில் 134 அடி உயரத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில் கடல் வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதால் மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கத் தடை விதிக்க வேண்டும். மற்ற கடல் பகுதிகளிலும் எந்த விதமான கட்டுமானங்கள் கட்டவும் தடை விதிக்க வேண்டு எனத் தனது மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பொது நலன் கருதி இந்த மனு தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார். முன்னதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சார்பில் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் பேனா நினைவுச் சின்னத்திற்கு அனுமதி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விரைவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.