சிதம்பரம் ரயில் நிலையத்தில் செங்கோட்டை விரைவு ரயில், கம்பன் விரைவு ரயில், அயோத்தி விரைவு ரயில், மயிலாடுதுறையிலிருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் விரைவு ரயில் சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செப்டம்பர் 5-ஆம் தேதி சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி எம் பி-யுமான தொல்.திருமாவளவன் கலந்து கொள்கிறார். போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வர்த்தக சங்கம், மத்திய தொழிற்சங்கம், உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த, ஆதரவு தெரிவித்த அனைத்து கட்சியினரையும் அழைத்துச் சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சு வார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதாசுமன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்எல்ஏ சிந்தனைச்செல்வன், டிஎஸ்பி ரூபன்குமார், ரயில்வே இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் அருண்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ராஜா, மாவட்ட குழு உறுப்பினர்கள் வாஞ்சிநாதன், ஜெயசித்ரா, நகர்மன்ற துணைத்தலைவர், முத்துக்குமரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச்செயலாளர் அரங்க.தமிழ்ஒளி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் தமிழ் முன்னன்சாரி, காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் மக்கின், வர்த்தக சங்க நிர்வாகி சிவராம வீரப்பன் மற்றும் பொதுநல அமைப்பினர் ரயில்வேதுறை அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் 30 நாட்களுக்குள் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லாத ரயில்களை நிற்க நடவடிக்கை எடுப்பது என்றும், ஜனசதாப்தி ரயிலைச் சிதம்பரம் வரை நீட்டிப்பது என உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் 30 நாட்களுக்குப் பிறகு கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால், அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என இதில் அறிவிக்கப்பட்டது.