மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தொழிலாளர்களுக்கு ஊதிய விகித உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் மணிவண்ணன் மற்றும் துறையின் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பேச்சு வார்த்தையின் முடிவில், 2019 ஆம் அண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதியின்படி 10 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 3% ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.527 கோடி கூடுதலாக செலவாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த ஊதிய உயர்வின் மூலம் 75 ஆயிரத்து 978 பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசு சார்பில் ஏற்கப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.