
சென்னை பட்டினப்பாக்கம் மெரினா கடற்கரைச் சாலையில் சந்திரமோகன் என்பவரும், அவருடன் இருந்த தனலட்சுமி என்ற பெண் ஆகிய இருவரும், மதுபோதையில் போலீசாரை ஆபாசமாகப் பேசியிருந்தனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து போலீசாரிடம் அத்துமீறிய இந்த ஜோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதற்கிடையே பணி செய்யவிடாமல் தடுத்து ஆபாசமாகப் பேசியதாகக் காவலர் சிலம்பரசன் என்பவர் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் இவர்கள் இருவர் மீதும் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இவர்கள் இருவர் மீது கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதோடு இருவரையும் கைது செய்ய போலீசார் தரப்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் மதுபோதையில் போலீசாரை ஆபாசமாகப் பேசிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வேளச்சேரியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அவர்கள் இருவரும் பதுங்கியிருந்த நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரையும் மயிலாப்பூர் காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக போலீசாரால் சந்திரமோகன் கைது செய்யப்பட்டபோது, “பிள்ளைகள் முன்பு என்னைக் கைது செய்து அழைத்து வந்துவிட்டீர்களே. இதற்கான தண்டனையை நிச்சயம் பெறுவீர்கள். நான் என்ன தவறு செய்தேன். என்னை ஏன் அடித்தீர்கள். நான் வெளியே வந்ததும் ஏதாவது செய்து கொண்டால் காவல்துறையினரே பொறுப்பு” என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.