அடையாறு பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பட்டினபாக்கம் முதல் பெசன்ட்நகர் வரையிலான சாலையை மீண்டும் சரிப்படுத்த முடியுமா? என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
ஏற்கனவே இந்த வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 27.04 கோடி ரூபாய் செலவில் 900 தள்ளுவண்டி கடைகளை மாநகராட்சியே அமைத்துக் கொடுக்க இருப்பதாகவும், கலங்கரை விளக்கம் அருகில் ரூபாய் 66 லட்சம் செலவில் 300 தற்காலிக மீன் விற்பனைக் கடைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர் ராஜகோபால், லூப் ரோட்டில் உள்ள மீன் வியாபாரிகளுக்கு கொடுக்கப்பட்ட மாற்று இடத்தில் மீன் மார்க்கெட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி அருகே இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, ஒரு ஏக்கர் மார்க்கெட் அமைக்கவும், ஒரு ஏக்கர் பார்க்கிக் வசதிக்கும் ஒதுக்கப்படும். புதிதாகக் கட்டப்படவுள்ள மார்க்கெட்டில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து விற்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடை மாற்றம் தொடர்பாக மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர். மேலும், அடையார் பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பட்டினப்பாக்கத்திலிருந்து பெசன்ட் நகர் வரை சேதமடைந்த பகுதிகளைச் சரிபடுத்தி போக்குவரத்தை துவக்க ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். வழக்கு விசாரணை மார்ச் 18- ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.