கள்ளக்குறிச்சி அருகேயுள்ள முகாமில், கரோனா பரிசோதனைக்கு வந்திருந்த நோயாளிகள் திடீரென சாலை மறியல் செய்ததால் பொதுமக்கள் பதறிப்போயுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் கரோனா சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் தற்போது 377 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரது ரத்தம்/சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதற்காக பலர் இங்கே காத்திருக்கின்றனர். அப்படிப்பட்ட இந்த மையத்தில் இருந்து, திடீரென்று 200க்கும் மேற்பட்டவர்கள் முகாமிலிருந்து வெளியேறி சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் பிரபாகரன், தியாகதுருகம் காவல் ஆய்வாளர் குமார், கரோனா தடுப்பு பிரிவு அலுவலர் அனந்தசயனம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நோயாளிகளிடம் சமாதானம் செய்தனர்.
அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட நோயாளிகள் அதிகாரிகளிடம், “இந்த முகாமில் இடநெருக்கடி அதிகமாக உள்ளது. இங்கு உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். உணவு நேரத்தின்போது ஒரே நேரத்தில் அனைவரும் திரண்டு செல்வதால் நீண்ட நேரம் வரிசையில் நெருக்கடியுடன் காத்து நிற்க வேண்டியுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே முகாம் கட்டிடத்தில் உள்ள கீழ்த்தளம், மேல்தளம் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ள நோயாளிகளை தனித்தனியாக பிரித்து வைக்க வேண்டும். அவர்கள் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும், உணவு தரமாக வழங்க வேண்டும். கரோனா பரிசோதனை முடிவு விபரத்தினை சுகாதாரத்துறை விரைவாக தெரிவிக்க வேண்டும்.
அப்படி சிறப்பு மையத்திற்கு அழைத்து செல்லப்படும் நோயாளிகளை 10 நாட்களில் குணமாகியவர்களை முகாமில் தங்க வைக்காமல் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை மிக விரைவாக தெரிவிக்கப்படவேண்டும்.
நோய்த்தொற்று இல்லாதவர்கள் அவரவர் வீடுகளுக்குச் சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்வதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். மருத்துவமனைக்கு சென்று நோய் குணமானவர்களை, தனிமை முகாமிற்கு கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். பரிசோதனை முடிவுகள் வருவதற்கு காலதாமதம் ஆவதால் இங்கு நோய் தொற்று உள்ளவர்களிடமிருந்து, நோய்த்தொற்று இல்லாதவர்களுக்கு இந்நோய் பரவ நேரும். ஆக இந்த குறைபாடுகள் எல்லாம் உடனடியாக சரி செய்ய வேண்டும்” என்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பரிசோதனை நோயாளிகள் கோரிக்கை வைத்தனர்.
பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், இவை அனைத்தும் உடனடியாக சரி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் சிறப்பு முகாமிற்கு சென்றனர்.
பரிசோதனை முகாமில் இருந்து வெளியே வந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவ்வழியாக டூவீலர், கார் போன்ற வாகனங்களில் சென்ற பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள். இதனால் அங்கு ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.