தென்காசி மாவட்டத்தின் சிவகிரி போலீசார் கிராமம் கிராமமாகச் சோதனையிலிருக்கின்றனர். அவர்கள் சிவகிரிப் பக்கமுள்ள தேவிபட்டணம் கிராமத்தில் சோதனை மேற்கொண்டிருக்கிறார்கள். ஊருக்கு வடக்குப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாகத் தகவல் கிடைக்க அங்குள்ள சுடுகாட்டுப் பக்கமிருக்கும் மாரியப்ப நாடாருக்குச் சொந்தமான கொய்யா தோப்பை கட்டுக்குத்தகைக்கு எடுத்து நடத்துகிற முருகன்(55) என்பவர் தோப்பின் மத்தியில் சாராயம் காய்ச்சுவதற்கான ஊறல் போட்டும், சாராயமும் வைத்திருந்தது தெரிய வந்திருக்கிறது. காய்ச்சிய கள்ளச் சாராயத்தோடு 18 லிட்டர் சாராய ஊறல் மற்றும் காய்ச்சப் பயன்படுத்திய சாமான்கள் அனைத்தையும் கைப்பற்றிய போலீசார் முருகனை கைது செய்து வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
மேலும் முருகனை சோதனை செய்ததில் அவருக்கு உயர் ரத்த அழுத்தமும் பிற நோய்களும் இருப்பது தெரியவர அவரது உடல் நிலை கருதி, ஸ்டேஷன் ஜாமினில் விடப்பட்டுள்ளார் என்கிறார்கள் சிவகிரி காவல் வட்டத்தினர். 40 நாள் லாக் டவுன் ஊரடங்கால் ஏற்பட்ட மதுத்தட்டுப்பாட்டை பயன்படுத்திக் கள்ளச் சாராயம் உற்பத்தி தொழில்கள் பார்த்தீனச் செடிகள் போன்று பரவலாக முளைவிட்டுள்ளன.