திருவாரூர் அருகே பயணிகள் ரயில் என்ஜின்
பழுதால் நிறுத்தி வைப்பு
திருவாரூர் ஆருகே செவ்வாய்க்கிழமை பயணிகள் ரயில் என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது.
காரைக்காலில் இருந்து, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் வழியாக திருச்சி செல்லும் பயணிகள் ரயில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு திருவாரூர் ரயில் நிலையத்துக்கு வந்தது. சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்ற பயணிகள் ரயில் திருவாரூரில் இருந்து முதல் நிறுத்தமான குளிக்கரை ரயில் நிலைய நிறுத்தத்துக்குள் நுழைந்த போது ரயில் ஏன்ஜினினுள் உள்ள மோட்டாரில் பழுது ஏற்பட்டு நின்றுள்ளது. என்ஜின் பகுதியில் இருந்து புகை அதிகமாக வந்ததால் ரயில் தொடர்ந்து ஈயக்க முடியாது என்று அறிந்த ரயில் ஊழியர்கள் இதுகுறித்து திருவாரூர் ரயில் நிலைய அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
பிறகு அங்கு சென்ற ரயில்வே ஊழியர்கள் பயணிகள் ரயிலில் இருந்து, திருச்சி, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பயணிகளை அடுத்து தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு சென்ற ஏர்ணாகுளம் விரைவு ரயிலை நிறுத்தி அதில் ஏற்றி விட்டனர். திருச்சியிலிருந்து ரயில் மெக்கானிக்குள் வந்து சரி செய்த பிறகே ரயில் செல்லும் என்று கூறி, பயணிகள் ரயிலில் செல்ல விரும்பும் பயணிகள் எடுத்து இரவு 7.10 மணிக்கு செல்லும் ரயிலில் செல்லலாம் எனவும் கூறினர். குளிக்கரை ரயில் நிலையத்தில் அவ்வழித் தடத்தில் ரயில்கள் செல்ல மாற்றுத் தண்டவாளம் இருந்ததாலும், பழுதான ரயில், ரயில் நிலையத்துக்குள் சென்று விட்டதாலும் மற்ற ரயில்களின் போக்குவரத்துக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை. மற்ற ரயில்களின் போக்குவரத்து தொடர்ந்தது.
- க.செல்வகுமார்