நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை விரைவில் தொடங்க உள்ளது.
நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்குப் பயணிகள் கப்பலை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. 150 பயணிகள் பயணம் செய்யும் வகையில் விரைவு பயணியர் கப்பல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கப்பல் இயக்கும் நடவடிக்கைகளைத் தமிழ்நாடு கடல்சார் வாரியம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியக் கப்பல் போக்குவரத்துக் கழகம் இந்தக் கப்பல் போக்குவரத்தைத் துவங்க நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி இருந்தன.
மேலும் மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை, மற்றும் வெளியுறவுத்துறை மூலம் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குவதற்காக நாகப்பட்டினம் துறைமுக கால்வாய் தூர்வாருதல், பயணிகள் முனையம் அமைப்பது போன்ற பணிகள் முடுக்கி விடப்பட்டிருந்தன.
இந்நிலையில், நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அக்டோபர் 10 ஆம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது. இந்த கப்பலுக்கு ‘செரியா பாணி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்தைத் தொடங்குவதற்காக கொச்சியில் கட்டப்பட்ட செரியா பாணி பயணிகள் கப்பல் இன்று நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திற்கு வந்தது. இந்த கப்பலுக்குத் துறைமுக அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். நாகை - காங்கேசன் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குவது குறித்த பணிகளைத் தமிழக பொதுப்பணிகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு கடந்த மாதம் 20 ஆம் தேதி ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.