மயிலாடுதுறை அடுத்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு வந்திருந்த தமிழக கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிராக பல்வேறு இயக்கத்தினரும், அரசியல்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதும், பாஜக ஆதரவு தெரிவித்திருப்பதும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
தருமபுரம் ஆதீனத்திற்கு வருவதற்கு முன்பு திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு கவர்னருக்கு ஆலய நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோ பூஜை, கஜ பூஜை செய்து சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகளில் தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு ஆலயம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
அங்கிருந்து செம்பனார்கோயில், மன்னம்ப்பந்தல் வழியாக தருமபுர ஆதீனத்தை வந்தடைந்தார். அப்போது மன்னம்பந்தலில் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மீத்தேன் கூட்டமைப்பு, உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் சார்பில் அவரை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பின. கவர்னருக்கு பாதுகாப்புக்காக சென்ற வாகனங்கள் மீது கொடிகள் மற்றும் கம்புகளை வீசி எறிந்து எதிர்பை தெரிவித்தனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்போடு தருமபுர ஆதீனத்தை வந்தடைந்த தமிழக ஆளுநருக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையிலான அக்கட்சியினர் வரவேற்பளித்தனர். தருமபுரம் ஆதீனம் வாசலில் கவர்னருக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தருமபுர ஆதீனத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றவர், ஆதீனத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை ஆளுநர் திறந்து வைத்தார். கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதினம் மடாதிபதி மற்றும் கவர்னர் பங்கேற்று பேசினார்கள்.
தொடர்ந்து தருமபுர ஆதீனம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கர விழாவில் பங்கேற்பதற்கான யாத்திரையை ஆளுநர் துவக்கி வைத்தார். ஆளுநர் வருகையை முன்னிட்டு 1850 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.