கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் தங்கியுள்ள வெளிநாட்டினர் யார், யார் என்கிற கணக்கெடுப்பும் நடத்தப்பட்டு, அவர்களை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை மலைமீது ஒரு குகையில் ஒரு வெளிநாட்டைச் சேர்ந்தவர் ரகசியமாக தங்கியுள்ளார். அவருக்கு சிலர் கீழேயிருந்து 3 வேளையும் உணவு கொண்டு சென்று தருகிறார்கள் என ரமணாஸ்ரமம் பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் சிலர் காவல்துறைக்கு தகவல் தந்துள்ளனர்.
அந்த தகவலின் அடிப்படையில், திருவண்ணாமலை நகர காவல்துறையினர் மற்றும் பொதுசுகாதாரத்துறையினர் அவரை தேடினர். தேடியதில் ரமணாஸ்ரமம் வழியாக, மலைமீது செல்லும் வழியில் ஒரு குகையில் சீனாவைச் சேர்ந்த யங் யாத்ரு என்கிற 35 வயது நிரம்பியவர் தங்கியிருந்ததை கண்டறிந்தனர். அவரது உடல் நிலையை பரிசோதனை செய்து, அவரை மீட்டு மலையை விட்டு கீழே இறக்கி கொண்டு வந்து, அத்தியந்தல் கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவரது பாஸ்போர்ட் ஆய்வு செய்தபோது சில மாதங்களுக்கு முன்பே அவர் திருவண்ணாமலை வந்திருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 11 நாட்களாக மலையில் உள்ள அந்த குகையில் தனித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு உதவியவர்கள் யார், யார் என்கிற பட்டியல் தயாரித்து அவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்த போலீஸார், அவர்களை மருத்துவ ரீதியாக கண்காணித்தும் வருகின்றனர்.