தேசிய மீன் வளர்ப்போர் தினத்தையொட்டி நாகப்பட்டினம் ஒருங்கிணைந்த மீன்வளத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் நிகழ்ச்சியில் மீன் இறால் வளர்ப்பு விவசாயிகளிடம் குறைகள் எதுவும் கேட்காமல் பாதியில் வெளியேறியதால் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் மீன் இறால் வளர்ப்பு விவசாயிகள் கடும் வாக்குவாதம் செய்ததோடு நிகழ்ச்சியிலிருந்து கூட்டமாக வெளிநடப்பும் செய்தனர்.
மாவட்ட நிர்வாகம் கண்துடைப்புக்காகவே நிகழ்ச்சியை நடத்துவதாக மீன்இறால் வளர்ப்பு விவசாயிகள் குறைபட்டுக்கொண்டனர். தேசிய மீன் வளர்ப்போர் தினத்தையொட்டி நாகப்பட்டினம் ஒருங்கிணைந்த மீன்வளத் துறை அலுவலகத்தில் மீன், இறால் வளர்ப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. அந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் அங்கு அமைக்கப்பட்டிருந்த மீன், இறால் வளர்ப்பு கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசிய மீன் வளர்ப்போர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த மீன் இறால் வளர்ப்பு விவசாயிகளிடம் கருத்துக்கள் மற்றும் குறை, நிறைகள் எதுவும் கேட்காமல் பாதி கூட்டத்திலேயே வெளியேறினார். அதைக்கண்டு ஆத்திரமடைந்த மீன் இறால் வளர்ப்பு விவசாயிகள் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் நிகழ்ச்சியிலிருந்து கூட்டமாகவும் வெளியேறினர் .
நாகை மாவட்டத்தில் பண்னை குட்டைகளில் மீன் மற்றும் இறால் வளர்ப்பு செய்யும் விவசாயிகள் பயன் பெறும் வகையில் ஆறுகள் கடலில் கலக்கும் முகத்துவாரங்களை தூர் வாரி கடல் தண்ணீரின் உப்புத் தன்மை ஆறுகளில் ஏறி கலப்பதை (Back water) மூலம் ஆற்று நீர் உப்பு நீராக மாறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளுர், கடலூர் மாவட்ட இறால் பண்ணை விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போல நாகை மாவட்ட இறால் பண்ணை விவசாயிகளுக்கும் மான்ய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும், இறால் பண்ணை விவசாயிகளுக்கு கால தாமதமின்றி லைசன்ஸ் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதோடு வேட்டைகாரனிருப்பு, கள்ளிமேடு, புதுப்பள்ளி ஆற்று முகத்துவாரங்களில் ஜெட்டி அமைக்க வேண்டும் என மீன், இறால் வளர்ப்பு விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.