'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாத சூழலில் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அதே மாதம் 29ஆம் தேதி அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஒவ்வொரு மூலையில் இருந்தும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டியும் தனது முடிவை மறு பரிசீலனை செய்யவும் வலியுறுத்தி குரல் எழுப்பினார்கள். இதன் ஒரு கட்டமாக 10ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து பல ரசிகர்கள் ஒன்றுகூடி ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் விதமாக 'வா....தலைவா....வா' என்ற கோஷத்தை எழுப்பி வேண்டுக்கோள் விடுத்தனர். இதை தொடர்ந்து என்னுடைய முடிவை அறிவித்துவிட்டேன் என்னை அரசியலுக்கு அழைத்து வேதனைபடுத்த வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டார் ரஜினி.
ரஜினியின் அறிக்கையையும் ஏற்றுக்கொள்ளாத ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், அடுத்த கட்டமாக ஆலோசனையில் இறங்கினார்கள். இதில் குமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மா.து.செ ராஜன், ‘அனைத்து இந்தியா ரஜினி மக்கள் கட்சி’ என்ற கட்சியை தொடங்க போவதாக அறிவித்துள்ளார். ரஜினி பெயரில் கட்சி தொடங்கி, மக்களுக்கு சேவை செய்ய இருப்பதாகவும் மேலும் கட்சியின் கொடி, சின்னம், கொள்கை குறித்து 22ஆம் தேதி கன்னியாகுமரி ஓய்.எம்.சி.ஏ. அரங்கில் தமிழகம் முழுவதிலும் இருந்து வரும் ரசிகர்களிடம் விவாதிக்க இருப்பதாகவும் மேலும் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய இருப்பதாகவும் ராஜன் கூறினார்.
இது தொடர்பாக அவர் தன்னுடைய லெட்டர் பேடில் எழுதி ரஜினி மக்கள் மன்ற தலைமைக்கும் மற்றும் ரஜினிக்கும் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது. இது ரஜினி ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.