நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம்(28.12.2023) காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதில் இருந்து பொதுமக்கள் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்பு 72 குண்டுகள் முழுங்க முழு அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேடு அருகே உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்த செய்தியை தாங்க முடியாமல் கட்சி தொண்டர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் 15 ஆவது வார்டின் தேமுதிக துணைச் செயலாளராக மோகன் என்பவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் விஜயகாந்த்தின் மறைவையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவிட்டு மோகன் வீடு திரும்பியபோது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.