தமிழகத்தில் பகுதி நேர சூரிய கிரகணம் ஆனது மாலை 5.14 மணிக்கு தொடங்கி 5.44 மணி வரை நிகழ்ந்தது. இந்திய அளவில் அகமதாபாத், மும்பை, டெல்லி, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களிலும் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சூரிய கிரகணத்தை பார்வையிட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக பிரத்யேக கண்ணாடிகளை அணிந்துகொண்டு சிறுவர்களும் மற்றும் பலரும் இந்த சூரிய கிரகணத்தை கண்டுகளித்தனர்.
சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அரிய நிகழ்வே சூரிய கிரகணம் ஆகும். தற்போது நிகழ்ந்துள்ளது பகுதி நேர சூரிய கிரகணம் ஆகும். இதனையடுத்து 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி தான் அடுத்த சூரிய கிரகணம் ஏற்படும். இதற்கு முன்பாக கடந்த 2019 டிசம்பர் மாதம் சூரிய கிரகணம் நிகழ்ந்துள்ளது. அதேபோல் 2020 ஜூன் மாதமும் இதேபோன்று பகுதி நேர சூரிய கிரகணம் நிகழ்ந்தது.
தமிழகத்தில் 5.14 மணிக்கு தொடங்கி 5.44 மணி வரை 8% அளவுக்கு மட்டுமே பார்க்கக் கூடிய அளவில் சூரிய கிரகணம் நிகழும் என அறிவியல் மையம் அறிவித்திருந்தது. கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்த்தால் பார்வையிழப்பு ஏற்படும் என அறிவியல் மையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதேபோல் சூரிய கிரகணத்தை முன்னிட்டு தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இன்று கோவில் நடைகள் மூடப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டது.