புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் தொடங்க இருப்பதாகவும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரம் பயன்படுத்த ஏற்பாடு நடப்பதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே தேர்தலை பற்றியும், வாக்களிப்பதின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வாக்காளராக தகுதி பெறக்கூடிய மாணவ மாணவிகளுக்கான தேர்தல் கல்விக் குழு தொடங்கப்பட்டது. புதுச்சேரி தேர்தல் துறையின் இப்புதிய அமைப்பின் தொடக்க நிகழ்வு அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு, தேர்தல் கல்விக்குழு அமைப்பை தொடங்கி வைத்து தேர்தல் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தவும், நேர்மையாக வாக்களிக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான அறிவுரைகளையும் வழங்கினார். பின்னர் மாணவர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு விளையாட்டு போட்டி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி கந்தவேலு, "புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் விரைவில் தொடங்கியிருப்பதாகவும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வி.வி.பேட் என்ற இயந்திரத்தை இந்த தேர்தலில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பயன்படுத்த ஏற்பாடு செய்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இதுகுறித்த விழிப்புணர்வை வாக்காளர் மத்தியில் ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் லூர்துசாமி, உதவி தேர்தல் அதிகாரி தில்லைவேல் உள்ளிட்ட தேர்தல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Published on 28/07/2018 | Edited on 28/07/2018