நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடந்துவருகிறது. இதற்கு பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களும், அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறையில் உள்ள குருஞாணசம்மந்தம் பள்ளியில் கடந்த 26-ம் தேதி முதல் ரகசியமாக பயிற்சி நடக்கிறது. பகல் நேரங்களில் இந்துசமயம் குறித்தான பயிற்சிகள் கொடுக்கபட்டுவருகிறது. இது பலத்த போலீஸ் பாதுகாப்பிலும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்களின் பாதுகாப்பிலும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து பள்ளி நிர்வாகத்துடன் முறையிட்டுவிட்டு, பிறகு மயிலாடுதுறை ஆர்.டி.ஓ.விடம் இதுகுறித்து முறையிட்ட பெற்றோர் ஒருவர் கூறுகையில், "தற்போது மாணவர்கள் சேர்க்கை நேரம் என்பதால் புதிய குழந்தைகளை சேர்ப்பதற்கும், பழைய மாணவர்கள் பள்ளி கட்டணத்தை செலுத்துவதற்கும் பெற்றோர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் காவல்துறையினர் கேள்வி மேல் கேள்வி கேட்டு உள்ளே அனுப்புவதும், குறிப்பிட்ட இடத்தைத் தாண்டி போக அனுமதிக்காமல் மறுப்பதும், போகும்போது கையெழுத்து வாங்கிக் கொண்டும், பிறகு வரும் பொழுது கையெழுத்தை வாங்கி கொள்ளுவதும் வேதனையாக இருக்கிறது. அதோடு வருபவர்களின் செல்போன் எண்ணையும் வாங்கிக்கொண்டு அனுப்புவது பெருத்த வேதனையாக இருக்கிறது" என்றார்.