இயற்கையான பாலின மாறுதல்களுக்கு உள்ளாகுபவர்களை பொது சமூகம் பெரும்பாலும் விலக்கி வைத்து விடுகிறது. அப்படி பாலின மாற்றம் ஏற்படும் திருநங்கைகள், மூத்த திருநங்கைகளிடம் தஞ்சம் அடைந்துவிடுகின்றனர். அவர்கள், தங்கள் குடும்பத்தை பற்றி யாரிடமும் தெரிவிப்பதில்லை. அதேபோன்று, அந்த நபர் குறித்த தகவலையும் குடும்பத்தார் தெரிவிப்பதில்லை. ஆனால் தற்காலத்தில் சமூகத்திலும், மக்களிடத்திலும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு மற்றும் மனமாற்றத்தால் திருநங்கைகளுக்கான குடும்ப அங்கீகாரம் கிடைக்க தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் திருநங்கை ஒருவரை மங்கையாக அங்கீகரித்து அவரது குடும்பத்தினரே முன்னின்று மஞ்சள் நீராட்டு விழா நடத்தி உள்ளனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் இந்திரா நகரில் வசிக்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்க்கும் கொளஞ்சி, விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வரும் அமுதா தம்பதியினரின் மகன் நிஷாந்த் (21). டிப்ளமோ கேட்டரிங் படிப்பை முடித்துள்ளார். பருவ வயது வர வர இவருக்கு உடலில் பாலியல் செயல்பாடுகள் மாற மாறத்தான் ஒரு திருநங்கை என்பதை அவர் உணர்ந்துள்ளார். அதையடுத்து வீட்டை விட்டு வெளியேறி திருநங்கைகளிடம் தஞ்சமடைந்த பின் தனது பெயரை நிஷா என மாற்றிக் கொண்டார். இந்நிலையில் நிஷாவின் உணர்வுக்கு மதிப்பளித்து அவரது உடலியல் மாற்றத்தை உணர்ந்த அவரது பெற்றோர் வீட்டுக்கு அழைத்தனர். பின்னர் அவருக்கு பாலியல் மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது முழுமையான திருநங்கையாக நிஷா மாறியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடத்தினர். இந்த நிகழ்வில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் நிஷா உடன் பயின்ற பள்ளி நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து விருந்து உபசரிப்பில் பங்கேற்றனர்.
பொதுவாக ஒருவர் பாலியல் அறுவை சிகிச்சை மூலம் திருநங்கையாக மாறிய பின் மூத்த திருநங்கைகளின் இருப்பிடத்திற்குச் சென்று அங்கு ஐக்கியமாகி விடுவது வழக்கம். அந்த நபருக்கு மூத்த திருநங்கைகள் மஞ்சள் நீராட்டு விழா நடத்தி அவரை பெண்ணாக அங்கீகரிப்பார்கள். ஆனால் முதன்முறையாக ஒரு திருநங்கைக்கு குடும்பத்தினரே பெண்ணாக அங்கீகரித்து மஞ்சள் நீராட்டு விழா செய்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.