பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்குத் தேவையான நிலம் கையகப்படுத்த தமிழக அரசு ஒப்புதல் வழங்கி அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையில் 20 கிராமங்களில் 5 ஆயிரத்து 746 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த ரூ.19.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நிலம் எடுப்பு பணிக்காக 2 வட்டாட்சியர்கள், 2 துணை வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதே சமயம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான தகவல் வெளியான நாளிலிருந்தே சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுக்கு விமான நிலையம் வேண்டாம் எனவும், தங்களை வாழ்விடங்களில் இருந்து அகற்றக் கூடாது எனவும் கோரிக்கை வைத்து சுமார் 400 நாட்களுக்கு மேலாகத் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.