கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ளது சி.புதுப்பேட்டை கடற்கரையோர மீனவ கிராமம். இங்கு கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி இந்த கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கடற்கரையோரம் செல்லும்போது எட்டு போதைப்பொருள் பாக்கெட்டுகள் கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கூறியுள்ளார். அதை கிராம நிர்வாகத்தின் மூலம் போதை பாக்கெட்டுகளை போலீசாரிடம் எடுத்து கொடுத்துள்ளனர்.
கடந்த 3 மாதமாக அது சம்பந்தமான வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்துள்ளது. இதுகுறித்து சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் வரை புகார் சென்றுள்ளது. அவர் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு போதை பாக்கெட்டுகள் சம்பந்தமாக ஏன் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை என்று கேட்டுள்ளார். இதையடுத்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் நான்கு பாக்கெட்டுகள் மட்டுமே பிடிபட்டுள்ளதாக காட்டப்பட்டுள்ளது. மீதி நான்கு பாக்கெட்டுகள் எப்படி மாயமானது. இதுகுறித்து போலீசார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
மீனவ மக்கள் எடுத்துக் கொடுத்த எட்டு போதை பாக்கெட்டுகள் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்ததா? அதில் மீதி நான்கு பாக்கெட்டுகளை எடுத்தது யார்? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்துள்ளது. இது குறித்தும் சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தியுள்ளார். பரங்கிப்பேட்டை போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் அங்கிருந்த போலீசாரிடம் தீவிர விசாரணை நடத்திய அவர் இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக கூறியுள்ளார். இது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாகியுள்ளது. மீனவ மக்கள் எடுத்துக் கொடுத்த எட்டு பாக்கெட் போதைப் பொருளில் நான்கு பாக்கெட் எப்படி மாயமானது புரியாத புதிராக உள்ளது என்கிறார்கள் மீனவ கிராம மக்கள்.